சனி, 13 மார்ச், 2021

மண்பாண்டங்கள் பற்றிய வரலாற்று செய்திகள் மற்றும் மண்பாண்டங்களின் நன்மைகள்

எழுத்தறிவுக்கு முந்தைய தொல்பழங்காலக் கலாச்சாரத்தை சார்ந்ததாக உள்ளது மண்பாண்டக்கலை. மண்பாண்டம் என்பது களிமன் வகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மண்பாண்டத்தொழில் உலகின் மிகப் பழமையான தொழில். தமிழில் குயத்தொழில் என்றும், மண்பாண்டங்கள் செய்பவர்கள் குயவர்கள் என்றும் அழைக்கின்றனர்.

நம் வாழ்வில் இருண்டுரக் கலந்த மண்பானை கால மாற்றத்தால் மறைந்துவருகிறது.தமிழ்நாட்டில் திருவாரூர், போடிநாயக்கனூர், தேனி, தஞ்சாவூர், மானாமதுரை போன்ற இடங்களில் பரவலாக மண்பான்டத் தொழில் செய்யப்பட்டு வருகிறது.

மண்ணை நன்றாகக் குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள் (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள். மண்பானையில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் அதன் பயன்பாட்டைப் பொருத்து தனித்தனி பெயர்களும் உண்டு.

குறிப்பாக நெல்மணிகள் சேமித்து வைக்க பெரும்பாலும் குதிர்கள் (அகப்பானை) பயன்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் இந்த குதிர் (அகப்பானையை நீங்கள் பார்க்கலாம். இந்த குதிர் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும்).

இவ்வாறு வெவ்வேறு இடங்களில் பலவிதமான பானைகள் பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஒருகாலத்தில் மண்பாண்டங்கள் விற்பனை பிரபலமாக இருந்து வந்தது. காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மண் தட்டுப்பாடு போன்ற மண்பாண்டங்கள் தொழில் நலிவடைந்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

களிமண்ணுடன் நீர் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணை சூழையில் இட்டு மண் சட்டியில் செய்த மீன் குழம்புக்கு இருக்கும் வாசனை வேறு எந்தப் பாத்திரத்தில் செய்தாலும் வராது. நம் முன்னோர்களுக்கு மட்டும் தான் தெரியும் மண் சட்டியின் (பாத்திரங்களின்) அருமைகள்.

மண்பானைகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் சேமித்து வைக்க, தானியங்கள் சேமித்து வைக்க, குழம்பு வைக்க, சாப்பாடு வைக்க, பொங்கல் வைப்பதற்க்கு என்று அதற்கேற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

களிமண்ணினால் செய்யப்படும் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை ஒரு நாளும் வாழ்வில் மற்றக்க இயலாது. எந்த ஒரு தீங்கையும் குழந்தைகளுக்கு விளைவிக்காத விளையாட்டுப் பொருட்கள் களிமண் பொம்மைகள்.

மண்பாண்டங்களினால் ஏற்படும் நன்மைகள்:

  • மண்பாண்டங்களில் செய்யும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.
  • மிகச்சிறந்த நீர் வடிகட்டியாக் மண்பானை உள்ளது. பிராண சக்தி அதிகரிக்க மண்பானை மிகவும் உதவிகரமாக உள்ளது.
  • மண்பாண்டங்களில் ஊற்றி வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு காரணம் மாண்பாண்டங்களில் உள்ள துளைகள் வழியாக ஆவியாதல் நடைபெறுவதால்தான். குடிநீரை இயற்க்கையாக சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்றது மண்பானை.
  • நமது முன்னோர்கள் மண்பாண்டங்களை பயன்படுத்தியதால்தான் இன்றளவும் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். இன்றும் முடி நிரைக்காத மூதாட்டியை நாம் காணலாம்.
  • மண்பானையில் ஊற்றி வைக்கப்படும் மோர் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும்.
  • மண்பானையில் சமைக்கப்படும் உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் உணவின் ருசியையும் கூட்டும் தன்மையுடையது மண்பாண்டம்
  • மண்பானையில் உள்ள களிமண் காரத்தன்மை உடையது என்பதால் நாம் சமைக்கும் உணவில் உள்ள காரத்தன்மையுடன் கலந்து உணவில் அமில காரத்தன்மையை சரிசெய்கிறது.
  • இயற்கையோடு ஒன்றி வாழ்வதை தவிர்த்து விட்ட காரணதால் இன்று இந்த குயவனின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து நம் பாரம்பரிய பெருமைகளை அழிவுக்குச் செல்லாமல் பாதுக்காப்பது நமது கடமை.

குறிப்பு:

நமது பாரம்பரியமான மண்பான்டங்களின் பெயர்களை சற்று உச்சரித்துப் பாருங்கள்.

  • அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
  • அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
  • அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
  • அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
  • அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
  • அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
  • உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
  • உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
  • எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
  • எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
  • எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
  • ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
  • ஓதப் பானை - ஈரப் பானை
  • ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
  • ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
  • ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
  • கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
  • கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
  • கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
  • கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
  • கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
  • கரிப்பானை - கரி பிடித்த பானை
  • கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
  • கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
  • கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
  • கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
  • காடிப் பானை - கழுநீர்ப் பானை
  • காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
  • குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
  • குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
  • கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
  • கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
  • கூர்ப் பானை - கூர் முனைப் பானை
  • கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
  • கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
  • சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
  • சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
  • சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
  • சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
  • சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
  • சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
  • சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
  • சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
  • சின்ன பானை - சிறிய பானை
  • தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
  • திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
  • திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
  • துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
  • தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
  • தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
  • தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
  • நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
  • பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
  • படரப்பானை - அகற்ற - பெரிய பானை
  • பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
  • பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
  • பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
  • மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
  • மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
  • மிண்டப் பானை - பெரிய பானை
  • மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
  • முகந்தெழு பானை - ஏற்றப் பானை
  • முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
  • முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
  • மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
  • மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
  • வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
  • வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
  • வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை

இயற்கையோடு இணைந்து வாழ முயற்சி செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...